Thursday, 22 December 2022
Wednesday, 21 December 2022
நூல் விமர்சனம் - கு.சுமத்ரா, இயற்பியல் துறை, பொறுப்பாசிரியர் (மேல்நிலை) ., நூல் - பொற்கை சுவாமி , ஆசிரியர்: திரு சத்திய பிரியன்
புத்தகத்தின் தலைப்பு: பொற்கை சுவாமி
ஆசிரியர்: திரு சத்திய பிரியன்
புத்தகத்தின் விலை 210
"பொற்கை சுவாமி" நூலை எழுதிய ஆசிரியர் சத்தியப்பிரியன் எளிய தமிழில், படிப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றி விளக்கியுள்ளார்.
தங்கக்கை சுவாமி என அழைக்கப்பட்ட காரணத்தையும் விளக்குகிறார்.
சுவாமிகளின் பிறப்பு, கல்வி, திருவண்ணாமலையில் அவரது 40 வருட வாழ்க்கை அனைத்தையும் ஒரே கோவையாக படிப்பவர் மனதில் தெளிவாக பதியும் வண்ணம் கூறியுள்ளார்.
வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க சிறு வயதிலேயே அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஜன வசியத்தை பெற்றிருந்தார் என்பதை பொருத்தமான உதாரணங்களுடன் கூறியுள்ளார்
"தெய்வத்தின் கோபத்தை குருவின் மூலம் போக்கிக் கொள்ளலாம் ஆனால் அந்த குருவின் கோபத்தை தெய்வத்தால் கூட போக்க முடியாது" என்கிறது வேதம் இதை விளக்க, ஒரு பழ வியாபாரி சுவாமிகளிடம் நடந்து கொண்ட விதத்தையும் அதனால் அவருக்கு ஏற்பட்ட தீங்கையும் கூறி அழகாக விளக்குகிறார்.
நான்மறை, உபநிடதம் என்று சமஸ்கிருதத்திலும் பன்னிரு திருமுறை, பிரபந்தம், கம்பராமாயணம் என்று தமிழிலும் கணிதம் மற்றும் விஞ்ஞானம் என அனைத்தையும் சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்து மகா ஞானியாக விளங்கினார்.
சுவாமிகள் திருவண்ணாமலையில் நுழையும் போதும், திருவண்ணாமலையைக் கண்டு வியக்கும் போதும் நாமும் அவருடனே இருப்பதைப் போன்ற உணர்வை ஆசிரியர் நமக்கு ஏற்படுத்துகிறார்.
ஆசிரியர் இந்நூலில் சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றி மட்டுமல்லாமல் அவருடைய சமகாலத்தவuhd இரமணரைப் பற்றியும் இருவருக்கும் இடையேயான உன்னதமான தொடர்பை பற்றியும், விரிவாக விளக்குகிறார். மேலும் அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகளைப் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்.
பிரம்ம நிலையை எய்திய இருவரும் ஒருவரே என்பதை நரசிம்மன் என்பவருடைய அனுபவத்தின் மூலம் விளக்குகிறார் மேலும் அதே காலத்தில் வாழ்ந்த விட்டோபா சுவாமிகள் பற்றியும் திருப்புகழ் சுவாமிகள் பற்றியும் அவர்களுக்கும் சேஷாத்திரி சுவாமிகளுக்கும் உள்ள தொடர்பினை பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.
“பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்கிறது சங்கப்பனுவல். அதைப்போல சுவாமிகள் எளிய மனிதர்களிடமும் மிகப்பெரிய மகான்களிடமும் ஒரே விதமான அன்புடன் பழகி வந்துள்ளார் என்பதையும் அவரை நம்பிய மனிதர்களுக்கு அவர்களுக்குத் தேவையானவற்றை வேண்டிய நேரத்தில் செய்துள்ளார் என்பதையும் நிறைய உதாரணங்களுடன் எடுத்துரைத்துள்ளார்.
சமகாலத்தில் வாழ்ந்த வெவ்வேறு மகான்களின் வாழ்க்கையை ஒரே புள்ளியில் இணைத்து, அனைவருடைய நோக்கமும் ஒன்றே என்று ஆசிரியர் தெளிவாக புரிய வைத்துள்ளார். இந்நூலை படிக்கும் போது நாமும் சுவாமிகளுடன் கூடவே பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல முற்றிலும் உண்மை.
கு.சுமத்ரா,
இயற்பியல் துறை,
பொறுப்பாசிரியர் (மேல்நிலை),
ஓன்ஜிசி பொதுப்பள்ளி,
நிரவி,
காரைக்கால்.
Subscribe to:
Posts (Atom)
-
Tamil is the oldest surviving classical language. That has a greatest history that begins before thousands of years. It has produced gre...
-
1995 ஆம் ஆண்டு முதல் தி இந்து நாளிதழின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பக்கங்களில் வெளியிடப்பட்ட " கேள்வி மூலை " என...