நூல் : சூப்பர் குழந்தை
நூல் ஆசிரியர் : பிரகாஷ் ராஜகோபால்
நூல் விமர்சனம்
பதிப்பகம் : சுவாசம்
பதிப்பகம் Pvt.
52/2 Near B.S
Mahal, Ponmar
Chennai,
Tamil Nadu.- 600127
Email.
swasam.publications@gmail.com
நூலின் விலை :ரூ.220
இந்த நூலுக்கு விமர்சனம்
எழுதுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஏனென்றால் ஒரு குழந்தையை
உலகின் நெறி சார்ந்த மனிதனாக
உருவாக்குவதற்கு இந்த நூல் வழிகாட்டியாக அமையும் என்று நான் நம்புகிறேன். நூலின் ஆசிரியர் ஒரு உளவியல்
அறிஞரோ அல்லது உளவியல் சார்ந்த கருத்துகள் தெரிந்தவரோ அல்ல என்பதை தன்னுடைய முன்னுரையிலே இவர்
விளக்கியுள்ளார். அப்படிப்பட்ட சூழலில் இவ்வாசிரியரால் இந்த அளவுக்கு உளவியல் கருத்துகளை
எடுத்துரைக்க முடியுமா? என்பது சற்று வியப்பாகத் தான் உள்ளது.
அதற்கு முக்கிய காரணம்
அவருடைய அனுபவ செயல்பாடுகள் என்று நான் நினைக்கின்றேன். ஒரு மனிதனுக்கு உளவியல்
ரீதியான கருத்துகள் தோன்றுகிறது என்றால், அவன் ஒரு உளவியலாளராக இருக்கக் கூடும் என்று எண்ணுவது சரியானது அன்று. என்னுடைய சிந்தனை ஓட்டத்தில்
உளவியல் தொடர்பான கருத்துகள் அனைத்தும் அவரவருடைய அனுபவச் செயல்பாடுகளாகத்
தோன்றியிருக்கிறது என்று நான் நினைக்கின்றேன். இதுதான் உண்மையாகவும்
இருக்கக்கூடும். இதன் வழி தோன்றியதுதான் உளவியல் சிந்தனைகள். அந்த நிலைக்கு ஏற்ப இந்த
ஆசிரியர் மிக அற்புதமான உளவியல் சார்ந்த குழந்தைகள் தொடர்பான சிந்தனைகளைத் தன் அனுபவத்தின் வாயிலாக
பெற்றோர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியான முறையில்
எடுத்துரைத்துள்ளார்.
இந்நூலில் இவர், 21 தலைப்புகளில் குழந்தைகள் பற்றி தான்
கண்டும் ஆய்ந்தும் வியந்தும் பார்த்த அனுபவங்களை
உளவியல் சார்ந்த கூறுகளையும் பகுத்தாய்ந்து விளக்கிக் காட்டியுள்ளார். ஒரு குழந்தை சிறப்பாக வளர
வேண்டும் என்றால் ஒன்பது விதமான அறிவுத்திறன்களை அவர்களுக்கு நாம் கற்றுத் தர
வேண்டும் என்று அதைப் பட்டியலிட்டுக் காட்டிய விதம் மிகவும் சிறப்பு. பார்வை வழி, மொழி வழி, லாஜிக்கலாக, உடல் வழி, இசை வழி, உள்ளார்ந்து, புறம் சார்ந்து, இயற்கை வழி, ஆன்மீக வழி இந்த ஒன்பது நிலைகளை ஒரு குழந்தைக்கு நாம்
சரியான நேரத்தில் சரியான விதத்தில் புகுத்தி விட்டோம் என்றால் அந்தக் குழந்தை
உலகில் அரிச்சந்திரனாகவோ மகாத்மாவோ வளரும் என்பதை மகாபாரதம் மற்றும் ராமாயண
கருத்துகளோடு ஒப்புமைப்படுத்தி எடுத்து எழுதிய விதம் பாராட்டுக்குரியது. இதன் மூலம் ஒரு மனிதன்
வாழ்வில் பெரும், அனுபவங்களே உளவியல் ரீதியான கருத்துக்களை உலகிற்கு அளிக்கிறது. இது குழந்தையாக இருந்தாலும்
பொருந்தும் என்பதைச் சுட்டிக்காட்டி
உள்ளார். எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் சூப்பர்
குழந்தை தான் என்ற கருத்து நமக்குப் பழைமையாகத் தோன்றினாலும் நாம் உலகில்
பார்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கு அது புதுமையாகத்தான் இருக்க வேண்டும்என்று அழகாக
ஆணித்தனமாக எடுத்துரைத்திருக்கின்றார்.
மூளை வளர்ச்சித் திறன் என்ற
தலைப்பில் அறிவியல் தொடர்பான அனுபவங்களையும் குழந்தைகள் பெறும் அனுபவம் தொடர்பான
அனுபவங்களையும் ஒப்புமைப்படுத்தி மூளைகளின் செயல்பாட்டுத் திறன் இயக்கப்படுகிறது
என்பதை கருத்து (Concept) ரீதியாக விளக்கியுள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது. மூளையானது வாழ்வியல்
அனுபவங்களை கருத்து ரீதியான தொடர்புகளோடு ஈடுபடுத்தி அறிவியல் ரீதியாகவும் உளவியல்
ரீதியாகவும் அதை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது என்பதை இசையில் தொடங்குதம்மா என்ற
தலைப்பு வழியாக புரிந்து கொள்ள முடிகிறது.
தகவல் பரிமாற்று திறன் (communication
skills) இன்று நிலையில் குழந்தைகளின் மூளை கேமரா மெமரி போல. தான் பார்ப்பதை நினைப்பதை
படங்களாக நினைவுப்படுத்திக் கொள்ளும். மேலும் குழந்தைகளுக்கு
எதிர்மறையான கட்டளைகளை நாம் அறிவுறுத்தும் போது அந்த குழந்தை எதிர்மறையான கருத்து
சார்பில் சிந்திக்கும் என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே குழந்தைகளிடம் நாம்
எதிர்மறையான கருத்துகளை விதிப்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்கள் குழந்தை என்பதால்
நமக்கு தெரிந்த கருத்துகளை அவரிடம் புகுத்துவது என்பது சரியானதன்று. குழந்தைகள் சிந்திப்பதற்கு முடிவெடுப்பதற்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்
என்பது நிதர்சனமான உண்மை இதை நாமும் உணர வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்
கூடிய கருத்தாகும்.
இந்த நவீன கால சூழ்நிலைக்கு
ஏற்ப குழந்தைகளை உடல் ரீதியாகவும் மன
ரீதியாகவும் சமநிலைப்படுத்துவதற்கு விளையாட்டு ஒன்றே மூல காரணமாக இருக்கும் முடியும் என்பதை இந்நூல் ஆசிரியர் அவர்கள்
தெளிவுபடுத்தி உள்ளார். இக்கருத்தை அனைவரும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பான BENEFITS OF
PLAY என்ற விளக்கப்படம்
மூலம் நமக்கு அதை தெளிவு படுத்தியுள்ளார். ஒரு குழந்தை அனைத்து
நிலைகளிலும் மனநிலையும் உடல் உறுப்புகளையும் சரியாக வைத்திருப்பதற்கு விளையாட்டு
என்ற செயல்பாடே வழிவகுக்கின்றது என்பதை நாம் உணர்ந்து உணராமல் இருக்கக் கூடாது
என்பதை நேர்மறையான கருத்தோடு நமக்கு விளக்கி காட்டியுள்ளார் .
புலன் அனுபவம் தேவை பற்றி
சிறந்த முறையில் எடுத்திருக்கின்றார் நாம் தற்போது குழந்தைகளிடம் இதைத் தொடாதே, அதைத் தொடாதே என்று கூறிக்
கொண்டிருக்கின்றோம். இது மாதிரியான தொடர்கள் குழந்தைகளின் மன நிலையைப்
பாதிக்கும். குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப ஆசிரியர் அவர்கள் புலன் அனுபவ விளையாட்டுகளைப் பற்றி
கூறியிருப்பது மிகுந்த பலன் அளிக்கும் என்று நான் நம்புகிறேன் குழந்தைகளின் கேள்வி
ஞானத்தையும் அறிவுத்திறனையும் வளர்ப்பதற்கு கேட்டல் திறன் என்பது மிகவும்
முக்கியமான ஒன்றாகும். இந்நிலைப்பாடு நம்
முன்னோர்களிடம் காணப்பட்டதை இன்றும் நாம், நம் குழந்தைகளோடு
செயல்முறைப்படுத்த வேண்டும் என்பதைச்
சாடியுள்ளார்.
சுயசார்புத் தன்மையுடைய
குழந்தைகள் பற்றி ஆசிரியர் எடுத்துரைத்த கருத்துகள் மிகவும் வரவேற்கத்தக்கது. தன்மையுடைய குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்
கொள்ளும் திறமை உடையவர்களாகவும் இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளும்
குணம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்
என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். ஆசிரியர் அவர்கள் ப்ரீ ஸ்கூல் அவசியமா? என்ற தலைப்பில் அவசியம் என்ற கருத்தை முன்
வைத்திருக்கின்றார். இந்தக் கருத்தில் எனக்கு
மாறுபட்ட கருத்தும் உண்டு. ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகள் நினைவாற்றல் திட்டமிடுதல் வாசிப்பு மற்றும்
மொழி வளத்திறன் பகிர்ந்து கொள்ளும் பண்பு போன்றவை நன்கு முன்னேறி உள்ளதாகக்
கண்டறிந்துள்ளனர் என்று கூறினாலும் அந்தப்
பருவத்தில் குழந்தைகள் தாமாகவே கற்றுக் கொள்ள வேண்டிய செயல்பாடுகளை உணர்ந்து
கற்றுக் கொள்வதில்லை. இதற்கு ஃப்ரீ ஸ்கூல் முறை தடையாக
இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால், நம் காலங்களில் நாம் ஃப்ரீ ஸ்கூல் முறையில் பயின்றதில்லை. ஆனாலும் ஃப்ரீ ஸ்கூல்
முறையில் கண்டறியப்பட்டுள்ள அனைத்து கூறுகளையும் நாம் பெற்றுள்ளோம். ஆகையால் இந்த கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை. இருப்பினும் சூழலுக்கு ஏற்ப
அவற்றை மாற்றிக் கொள்வதில் தவறும் இல்லை.
ஒரு குழந்தை கருவுற்ற
நிலையில் குழந்தையைச் சுமக்கும் தாயானவள் எது மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும்
என்பது பற்றியும் அந்தக் குழந்தை பிறந்த பிறகு எந்த மாதிரியான உணவுகளை உண்ண
வேண்டும் உண்ணக்கூடாது என்பது பற்றியும் அட்டவணைப் படுத்திய விதம் மிகவும்
சிறப்பாக இருக்கின்றது.
கேட்ஜட்களும் குழந்தைகளும்
என்ற நிலையில் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகளாக நாம் எதை அறிவுறுத்த
வேண்டும் என்பதை, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வினைச் சான்றாகக் காட்டி விளக்கி இருப்பது பெரும்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். சூப்பர் குழந்தைகளை
உருவாக்குவது எப்படி? குழந்தைகள் பொய் சொல்லுமா? எமோஷனல் இன்டெலிஜென்ஸ் போன்ற நிலைகளில் அற்புதமான ஒரு கருத்தை இங்கு முன்வைத்திருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகளின் உணர்வு சார்
நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சரியான காலகட்டத்தில் சரியான செயல்களைச்
செய்தால் அது நேர்மறை குணங்களைக் குழந்தைகளிடம் வளர்த்து, அவர்களின் உணர்வு சார் அறிவை
பலப்படுத்தும். அவ்வாறு செய்யாவிடில் அது எதிர்மறை குணாதிசயங்களைத் தோற்றுவித்து, அவர்களைப் பலவீனப்படுத்தும்
என்ற கருத்தினைச் சாடியுள்ளார். இதை குழந்தையைப் பெற்றெடுத்த
பெற்றோர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
குழந்தைகளிடம் கேட்க வேண்டிய
கேள்விகள் என்ற தலைப்பில் 50 கேள்விகளை ஆசிரியர் அவர்கள் வரையறுத்துக்
காட்டியுள்ளார். இந்தக் கேள்விகள்
அனைத்தையும் நம் குழந்தைகளிடம் கேட்டு அறிந்திருக்கின்றோமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்
வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு மேலும்
இந்நூலுக்குச் சிறப்பினைத் தருகிறது. பெற்றோர்களாகிய அனைவரும் இந்நூலைப் படித்தால் தங்கள்
குழந்தைகளின் எதிகாலத்தை நெறிப்படுத்துவதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று
நம்புகின்றேன்.
விமர்சகர்
ஜெ.ஜெயப்பிரகாஷ்.MA.,MPhil.,BEd
தமிழாசிரியர்,l
ஓ.என்.ஜி.சி.
பொதுப் பள்ளி,
நிரவி, காரைக்கால்.
No comments:
Post a Comment